புதன், 2 பிப்ரவரி, 2011

76 முதல் 101 வரையிலான பாடல்கள்

துனிநாளும் விடா துதொடர்ந் தபல
னினிநா னணுகா மையியம் பினனால்
பனிநாண் மதிசூ டிபணிந் துதொழும்
தனிநா யகனா கியசண் முகனே!(76)

ஞானந் தனைநின் றுநடத் தவிடா
மோனந் தனையென் றுமொழிந் திடுமோ
ஆனந் தநடத் தனளித் தருளும்
மானந் தனிவேன் மயில்வா கனனே.(77)

மதமுஞ் சினமும் வளருந் தருவே
சதமென் றுணருஞ் சனனுக் கெளிதோ
கதமுந் தியருள் கனிவித் திடுவேல்
பதமுஞ் சுரமும் பதமே பெறலே.(78)

அய்யா முடலூண் மயமா யுளதால்
அய்யா றாறு மறிவித் தருள்வாய்
செய்யா முருகா திகழ்வே லரசே
இய்யா குமரா அருளா கரனே.(79)

நவியென் றிடுகண் மடவார் நனிகேள்
செவியென் றயில்வேள் புகழ்சென் றிலதோ
கவியென் றவன்வார் கழற்பெற் றிலதோ
ரவியென் றவன்வாழ் புவியன் றியதே.(80)

பெரியோ ரெனினும் புலையோ ரெனினுஞ்
சிறியோ ரெனினுந் தெளிவோ ரவரோ
குறியோ ரெனினுங் குருவா வருள்வா
னெறியோ டொழுகும் நிலைபெற் றிடினே.(81)

பக்திக் கயலே னனிநின் பதமுஞ்
சித்திக கயலே னெனறிண் ணமதே
குத்திக் கடலே பொருவே லரசே
முத்திக் கனியே முனிபுங் கவனே.(82)

பேயா கிலுநன் றதிலும் பிறிதென்
றேயா தனைவந் தடிமைத் தொழில்கொண்
டோயா தெனைநீ யொழியத் தகுமோ
வாயா ரமுதே மயில்வா கனனே.(83)

மிகவுங் கொடியேன் விதிகுன் றிடவந்
திகமும் பரமும் பெறவென் றிசைவாய்
சுகமுஞ் சுகமுந் தொடர்வேல் கொடுமுச்
சகமுந் தனிகாத் தருள் சண் முகனே.(84)

நசையன் பிலர்பா னயவா மொழியின்
வசையுண் டெனுமவ் வழிநின் றருள்வாய்
விசையம் பெறுசூர் வெருவப் பொருதெண்
டிசையும் புகழத் திகழ்வே லவனே.(85)

உறுகற் பகமென் றுனையே யடைவே
னிறுகற் பகைவற் கிதமோ துவனோ
தெறுகற் சிலைகொண் டெயில்செற் றிடுபூண்
டறுகட் பணியன் தருபுத் திரனே.(86)

கள்ளம் படுகட் கடையர் கடைதே
ருள்ளம் படலென் றகலக் களைவாய்
பள்ளம் படுநீ ரெனவே பரிவின்
வெள்ளம் படுநல் வழிவே லவனே.(87)

வள்ளக் குழைமங் கையர்சிங் கியிலே
கொள்ளைப் படுமென் குறைதீ ருமதோ
வெள்ளைத் தனிமால் விடையன் புகழும்
பிள்ளைப் பெருமா ளெனும்பெற் றியனே.(88)

வளையுஞ் சகமா யைமயக் கில்விழுந்
துளையுந் துயரின் னுமுணர்ந் திலையே
வளைகொண்ட பிரான் மருகா வடுசூர்
களையுஞ் சினவெங் கதிர்வே லவனே.(89)

பண்டே தொடர் பற்றொடுசுற் றமெனும்
வெண்டே ரைமகிழ்ந் துவிழித் திடவோ
கண்டே குறமங் கைதனைக் களவில்
கொண்டே கடிதே கியகொற்றவனே.(90)

பொன்னா வல்கெடப் பொழியும் புகமோ
ரின்னா ரினியா ரெனவெண் ணுவரோ
துன்னர் கிளையே ரறவே தொடுவேல்
மன்னா பொதுவாய் மழையும் பெயுமே.(91)

பொறியும் புலனும் புதிதும் முதிதும்
குறியுங் குணமுங் குலமுங் குடியும்
நெறியும் பரிசொன் றுமிலா நிலையா
னறியுந் தரமோ வயில்வே லவனே.(92)

என்னேரமதோ தெரியா திறனாம்
அன்னே ரமதொன் றாகா தெனமுன்
சொன்னேன் மனனே துவரோ துவரோ
தன்னேர் குகனற் சலசச் சரணே.(93)

தெரியத் தெரியச் செயலுற் றிடுமுன்
துரியப் பொருளைச் சொலுநா ளுளதோ
கரிபெற் றிடுமின் கணவா குறமின்
பரியப் பெரிதும் பணியுத் தமனே.(94)

மடிமைப் படினும் மயலுற் றிடினும்
அடிமைக் குரியோ ரருள்சே ருவரே
குடிமைக் கிலதோர் கொடிவெற் பிணையிற்
படிமைப் புலயே பரிவா யினியே.(95)

வரிவேல் விழியாம் வலைவீ சுமினார்
புரிவே ளையிலே பொருதிக் களைவாய்
பரிவே டஞ்சூழ்ந் ததுபோ லவுணர்த்
தெரிவேன் முனைமே லெறிசே வகனே.(96)

நனவிற் படுநல் லுலகத் தனையும்
கனவிற் பொருளாய்க் கருதா வெனைநீ
வினவிச் சொலுநா ளுளதோ விதியைச்
சினவிச் சிறையிட்ட டருடே சிகனே.(97)

காடும் மலையுங் கடலும் முருளச்
சாடுந் தனிவே லுடையாய் சரணம்
ஆடும் மயில்வே லரசே சரணம்
பாடும் வரதற் பரனே சரணம்.(98)

அனியா யமிதென் றவரே மடவார்
துனியார் பவமுந் துயருங் களைவார்
கனியார் முருகன் கழல்பெ ற்றிவா
ரினியா ரினியா ரிவருக் கிணையே.(99)

ஆளா யயில்வே ளடியிற் பணிவார்
கோளாற் பிறரைக் குறிசெய் தழியார்
மாளார் சமனால் மறுகார் பகையால்
மீளார் வினையால் வெருவா ரவமே.(100)

வாழ்வா ருறவாய் மகிழ்வார் பலருந்
தாழ்வார்க் கருளுத் தமனீ யலையோ
பேழ்வா யரவும் பிறைவெள் ளிறகுஞ்
சூழ்வார் சடையார் தொழுதே சிகனே.(101)