திங்கள், 30 ஆகஸ்ட், 2010

52 முதல் 65 வரையான பாடல்கள்

காணா விழியுங் கருதா மனமும்
வீணாய் விடமுன் விதியோ விதியோ
பூணாள் குறமின் புனமும் வனமும்
நாணாது நடந்திடு நாயகனே. (52)

ஊணே பொருளா யுழலுற் றடியேன்
வீணே கெடமுன் விதியோ விதியோ
பூணே யிமையோர் புகழே மிகயான்
சேணே பெறவேல் விடுதே சிகனே. (53)

கழுவா ரயில்வேல் கருணைக் கடலின்
முழுகார் குறுகார் முளரிக் கைக்கொண்
டொழுகார் வினையூ டுழல்வா ரவரோ
அழுகார் தொழுநோ யதிபா தகரே. (54)

விண்ணார் பதமும் விரிநீர் புடைசூழ்
மண்ணார் பதமும் மகிழேன் மகிழேன்
தண்ணா ரதுதே சயிலப் பகையே
கண்ணா ரமுதே கனியைப் பெறினே. (55)

உனையே யலதோர் பரமுண் டெனவே
நினையே னெனை யூழ்வினை நீடுமதோ
கனையேழ் கடல்போல் வருகார் சமணர்
முனையே தெறுசண் முகவே லவனே. (56)

இரவும் பகலுந் துதிசெய் திருதாள்
பரவும் பரிசே பரிசின் றருள்வாய்
கரவண் டெழுசூர் களையக் கதிர்வேல்
விரவுஞ் சுடர்வேல் விடுசே வகனே. (57)

இலகுந் துடிநே ரிடையார் விழிகூ
ரலகம் பெனவே யறியா தழிகோ
கலகந் தருசூர் கதறப் பொருதே
ழுலகம் புகழ்பெற் றிடுமோ தயனே. (58)

மாதோ மலமா யைமயக் கவருஞ்
சூதோ வெனமெய் துணியா வெனையின்
றேதோ விருள்செய் துநிறைந் திடுவார்
தீதோ டவருள் சிவதே சிகனே. (59)

களவும் படிறுங் கதமும் படுமென்
னளவுங் கதிர்கொண் டருள்சேர்ந் திடுமோ
இளகுங் குறமின் னிருதோள் முலையும்
புளகம் பரவப் புணர்வே லவனே. (60)

வாழைக் கனிமா மாதுரச் சுளையே
ஏழைக் கரிதென் றிடுவா ருளரோ
பாழைப் பயிற்செய் திடுசிற் பரையின்
பேழைப் பொருளா கியவே லவனே. (61)

சதிகொண் டமடந் தையர்தம் மயலிற்
குதிகொண் டமனத் தனெனக் குறியேல்
மதிகொண் டநுதற் குறமங் கைகுயந்
துதிகொண் டுமணந் தருடூ யவனே. (62)

தாயே யெனையா டனிவே லரசே
காயே பொருளாய் கனிகை விடுமோ
பேயே னிடையென் பெறவந் தெளிதாய்
நீயே மறவா நெறிதந் ததுவே. (63)

சின்னஞ் சிறியேன் சிதைவே செயினும்
பென்னம் பெரியோர் பிழைசெய் குவரோ
கன்னங் கரியோன் மருகா கழறத்
தன்னந் தனியென் றனையாண் டவனே. (64)

துடிபட் டமடந் தையர்சூ றையிலே
குடிபட் டிடுமென் குறைகட் டறுமோ
வெடிபட் டெழுசூர் கிளைவே ரொடுசென்
றடிபட் டிடவென் றமரும் பதியே. (65)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக